பேரா. நாகநாதன் 
அரசியல் பேட்டிகள்

தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல அனைத்து மாநிலங்களுக்கும் உரிமை கேட்கிறோம்!

தா.பிரகாஷ்

மத்திய - மாநில உறவுகள் குறித்த ஆய்வு செய்ய தமிழ்நாட்டு அரசால் அமைக்கப்பட்ட, ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயா்நிலைக் குழு கடந்த மாதம் பிப்ரவரி 16ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையின் முதல் பாகத்தை சமர்ப்பித்தது. அந்த குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் நாகநாதனிடம் பேசினோம்.

“ஒன்றிய மாநில உறவுகள் குறித்து அமைக்கப்பட்ட ராஜமன்னார் குழுவின் அறிக்கை 1971இல் வெளிவந்தது. அதற்கு பின்னர் நிலைமைகள் எவ்வளவோ மாறியிருக்கிறது.

ராஜமன்னார் அறிக்கையில் மருத்துவம், கல்வி பற்றியெல்லாம் எதுவும் சொல்லப்படவில்லை. மாநிலங்கள் தொடர்புடைய எல்லா விவகாரத்திலும் மாநில அரசை கலந்து கொண்டுதான் எந்த ஒரு சட்டத்தையும் ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும் என்றது.

உதாரணத்துக்கு உலகயே புரட்டிப்போட்ட தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் (LPG) கொள்கையை ஒன்றிய அரசு கொண்டு வந்தபோது மாநிலத்திடம் ஏதேனும் கேட்டார்களா? ஆனால் இன்றைக்கு அந்த கொள்கை தவிடுபொடியாகிவிட்டது. டிரம்பின் கொள்கையால் உலக வர்த்தக அமைப்பு(WTO) காணாமல் போய்விட்டது.

மாநில அரசைக் கேட்காமலேயே முடிவுகளை எடுத்து விடுகிறார்கள். உதாரணத்துக்கு, உலகத்திலேயே மிகப்பெரிய துறைமுகமான ஷாங்காய் (சீனா) துறைமுகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது என தெரியுமா? அரசுக் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அதேபோல், இங்கே சென்னைக்கு அருகே உள்ள காட்டுப்பள்ளி துறைமுகம் யாரிடம் உள்ளது? அதானியிடம் தானே உள்ளது? யாரைக் கேட்டு அவரிடம் கொடுத்தீர்கள்?

துறைமுகம், விமான போக்குவரத்து, காப்பீடு, வங்கி உள்ளிட்ட துறைகளின் அதிகாரம் ஒன்றிய அரசிடம் தானே உள்ளது. இதெல்லாம் இன்றைக்கு எப்படி தனியார் மையம் ஆனது?

காஷ்மீருக்கு தனி அந்தஸ்து கொடுத்த 370ஆவது சட்டப்பிரிவை நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி நீக்கிவிட்டார்கள். அரசமைப்பு சட்டவிதியில் என்ன இருக்கிறது என்றால்... 370ஆவது சட்டப்பிரிவை மாற்ற வேண்டும் என்றால், அந்த மாநில சட்டமன்றத்தின் ஒப்புதல் தேவை என இருக்கிறது. அதை கேட்டார்களா? ஆளுநர் ஆட்சி நடக்கும்போதே சிறப்பு அந்தஸ்தை நீக்கிவிட்டார்கள். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதம்.

அரசியலமைப்பு சட்டவிதிகளை எல்லை இல்லாத அளவுக்கு இந்த 75 ஆண்டுகளில் மீறியிருக்கிறார்கள். குறிப்பாக, இந்த 11 ஆண்டுகால பாஜக ஆட்சியில் திட்டக் குழுவை கலைத்துவிட்டார்கள்.

ஒன்றிய அரசே திட்டங்களை அறிவிக்கிறது. உதாரணத்துக்கு வேளாண் துறை மாநில பட்டியலில்தான் உள்ளது. ஆனால், வேளாண் பொருட்கள், வேளாண் வர்த்தகம் தொடர்பாக ஒன்றிய அரசு பொதுப்பட்டியலில் நடவடிக்கை எடுக்கலாம் என்று சொல்லித்தான் 3 வேளாண் சட்டங்களையும் கொண்டு வந்தார்கள். விவசாயிகளின் போராட்டத்துக்கு பிறகு சட்டத்தை திரும்ப பெற்றுக் கொண்டனர்.

வேளாண் துறை கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகிறது. அமெரிக்காவிலிருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி இல்லை என்கிறார் டிரம்ப். இதுநாள் வரை ஒன்றிய அரசும் இதை மறுக்கவில்லை. வாஷிங்டனில் விளையும் ஆப்பிள் இந்தியாவில் ரூ. 60 க்கு விற்கப்பட்டால், காஷ்மீரில் விளையும் ஆப்பிள் என்ன ஆவது?

தனியார் மையம் வந்த பிறகு மாநில அரசை விட தனியார் துறைகள் ஏகபோகமாக வளர்ந்திருக்கின்றன. தனியார் துறையால் இந்த 11 வருடத்தில் எவ்வளவு வேலை வாய்ப்புகள் பெருகியிருக்கிறது?

அந்நிய நேரடி முதலீடுகள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றன. நீங்கள் அவர்களுக்கு அளித்த சலுகைகள் என்ன? கார்ப்பரேட் துறைக்கு வரிவிலக்கு கொடுத்தீர்கள், மாநில அரசை கேட்டா கொடுத்தீர்கள்? விற்பனை வரி மட்டும் தான் மாநிலங்களிடம் இருந்தது. அதையும் ஜி.எஸ்.டி. பெயரில் எடுத்துக் கொண்டீர்கள்.

திருமணம் மண்டபத்துக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி ஒன்றிய அரசு போடுகிறது. நகராட்சிக்கு எதாவது ஒன்றிய அரசு உதவி செய்கிறதா? நகராட்சிதான் கால்வாயை சுத்தம் செய்கிறது, குப்பையை எடுக்கிறது. எந்த கூட்டாட்சி நாட்டிலும் இதுபோன்ற முறை தவறிய, அரசமைப்புக்கு விரோதமான அதிகார பறிப்பு நடதந்தே இல்லை. அதிகாரத்தை பறித்தும் என்ன சாதித்துவிட்டார்கள்?

பேரா. நாகநாதன்

1980இல் இந்தியாவும் சீனாவும் பொருளாதார வளர்ச்சியில் ஏறக்குறைய ஒரே இடத்தில் இருந்தன. இப்போது சீனா அடைந்திருக்கும் நிலை என்ன? அது குறித்து மோடி வாய் திறப்பாரா?

நாங்கள் நடுநிலையோடு ஆராய்ந்து முதல் பாகத்தை சமர்பித்திருக்கிறோம். அதில், அதிகார பரவலாக்கும் முறையை எப்படி தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள், அதிகார குவிப்பு என்னென்ன சீர்கேடுகளுக்கு வழிவகுத்திருக்கிறது என்பதை பதிவு செய்திருக்கிறோம்.

நாங்கள் தமிழ்நாட்டுக்கு மட்டுமில்லை. அனைத்து மாநிலங்களுக்கும் உரிமை கேட்கிறோம். சொந்த முயற்சி மாநிலங்கள் வளரட்டும்.

நாகலாந்துக்கு தனி அரசியலமைப்புச்சட்டம் வேண்டும் என கேட்கிறார்கள். இது குறித்து பிரதமர் மோடி வாய் திறப்பாரா? அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு மாகாணங்களுக்கும் அரசமைப்புச் சட்டம் தனியாக உள்ளது. நியூயார்க் மேயரான மம்தானி டிரம்ப் செய்வதை தவறு என தைரியமாக சொல்கிறார். அமெரிக்காவில் ஒரு மேயருக்கு உள்ள அதிகாரம் கூட இங்குள்ள மாநில முதலமைச்சருக்கு இல்லை.

நாம் கேட்பது கூட்டாட்சி தான். தனி ஆட்சி இல்லை. இந்தியாவில் மாநிலங்கள் இருக்கும். ஒன்றியமும் – மாநிலங்களும் அதிகாரங்கள் கொண்டவையாக இருக்கட்டும். இரண்டும் ஒன்றை ஒன்றை சார்ந்ததுதானே.

மக்களோடு இருப்பதுதான் மாநில அரசு. பாதுகாப்பு, தேசிய ஒருமைப்பாடு, தேசிய நலன்கள், நலன்களை ஒட்டிய அதிகாரங்கள் ஒன்றிய அரசிடம் இருப்பதில் தப்பில்லை. ஆனால், விவசாயத்துக்கும் ஒன்றிய அரசுக்கும் என்ன சம்மந்தம். நீங்கள் விவசாயத்தை தனியாருக்குத்தானே தூக்கி கொடுக்கிறீர்கள்.

தமிழ்நாடு ஒரு கமர்சியல் வங்கியை ஆரம்பிக்க முடியாது. ஆர்.பி.ஐ. அனுமதி கொடுக்காது. அரசியலமைப்பை திருத்தி எல்.ஐ.சி.யை தனியாருக்கு தாரை வார்த்தீர்கள் தானே? பாதுகாப்பு துறையில் தனியாரை அனுமதிக்கிறீர்கள். மாநிலங்கள் சும்மா வேடிக்கை பார்க்கின்ற அமைப்பா? மாநில அரசும் – ஒன்றிய அரசும் கூட்டாக ஆட்சி நடத்துவதான் ஜனநாயகம்.

கூட்டாட்சியல் இங்கு சிதைந்து போய்விட்டது. அரசியல் சார்ந்த கூட்டாட்சி நாட்டில் முன்னரே வந்துவிட்டது. ஒன்றிய அரசே தனியாக ஆட்சி செய்ய முடியவில்லை. ஒரே ஒரு கட்சி ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றிபெற முடியவில்லை.

பொதுவாக ஆட்சியை நடத்துங்கள். எல்லா மாநிலங்களுக்கும் பொதுவாக இருங்கள். எல்லா மாநில மொழியையும் வளருங்கள், எல்லா மாநிலங்களுக்கும் முன்னுரிமை கொடுங்கள்.

உலகளாவிய கருத்துகள் எல்லாம் அறிக்கையில் கொடுத்திருக்கிறோம். மத்திய மாநில அரசுகள் வலிமையாக இருக்கவும், மக்கள் தங்கள் உரிமைகளை காப்பாற்றி கொள்வதற்கும் இந்த அறிக்கை வாதிடுகிறது.

ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து குழு அளித்துள்ள பரிந்துரைகள் என்ன?

1983இல் சர்க்காரியா குழுவை இந்திரா காந்தி ஏன் அமைத்தார் என்று பலருக்கும் தெரியாது. 1983இல் ராமகிருஷ்ண ஹெக்டே, கர்நாடக முதலமைச்சர். அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., ஆந்திர முதலமைச்சர் என்.டி.ஆர்., பாண்டிச்சேரி முதலமைச்சர் டி. ராமச்சந்திரன்.

தென்னிந்திய மாநில முதல்வர்கள் மாநாடு பெங்களூரில் 1983இல் நடைபெற்றது. அதில், எம்.ஜி.ஆர். கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் 8 ஆவது நிதிக்குழு தென்மாநிலங்களைப் புறக்கணித்ததாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரண்டாவது தீர்மானம், மத்திய – மாநில உறவுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்பது. இது தொடர்பாக நாங்கள் ஒரு குழு அமைக்கப்போகிறோம் என ஹெக்டே சனிக்கிழமை சொல்கிறார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிக்கு சர்க்காரியா குழுவை அமைக்கிறார் இந்திரா காந்தி.

பொதுப்பட்டியலில் ஒன்றிய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டு விட்டால், மாநில அரசு அதே விஷயத்தை செய்ய முடியாது. மாநில அரசை முடக்கத்தான் சர்க்காரியா குழுவே அமைக்கப்பட்டது. அந்த குழு ஒரே ஒரு விஷயத்தைதான் உருப்படியாக சொன்னது. ஆளுநரை அரசியல் சார்பற்றவராக நியமிக்க வேண்டும். குடியரசுத் தலைவர் எப்படி மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று செயல்படுகிறாரோ அதேமாதிரிதான் மாநில அரசின் அமைச்சரையின் பரிந்துரையை ஏற்றுதான் ஆளுநர் செயல்பட வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக சொல்லியிருக்கிறது என்றது.

அதனால், ஆளுநர் தன்னிச்சையாக செயல்படக் கூடாது. இனிமேல், ஆளுநரை நியமிக்கும்போது மாநில முதலமைச்சரை கலந்தாலோசித்துதான் நியமிக்க வேண்டும் என்றது.

2009இல் புஞ்ச் ஆணையம் போடப்பட்டது. அந்த ஆணையமும் அதையேதான் சொன்னது. மாநில அரசுக்கு இடையூறு கொடுக்கக் கூடியவரை ஆளுநராக போடக் கூடாது என சொல்லியிருக்கிறது. இந்த இரண்டு ஆணையங்களும் ஒன்றிய அரசு அமைத்தவை.

ஆளுநர் குறித்து ஆணையங்கள் சொன்னவை, நடைமுறை பிரச்னை சார்ந்து சொல்லப்பட்டவை, நீதிமன்றங்கள் கூறியவை ஆகியவற்றைத் தொகுத்து அளித்திருக்கிறோம். அரசியல் சார்பற்ற முறையில் பரிந்துரைகள் அளித்திருக்கிறோம். மாநிலங்களுக்காக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்திருக்கிறோம்.

10 தலைப்புகளில் அளித்திருக்கிறோம். அதிகாரங்கள் ஏன் பரவலாக்க வேண்டும் என முதல் பதியிலும், கல்வி, சுகாதாரம், தொகுதி மறுசீரமைப்பு, ஆளுநர், மொழி, ஜிஎஸ்டி என 10 தலைப்புகளில் பரிந்துரைகளை அளித்திருக்கிறோம்.

முதல் பாகத்தை மட்டும் இப்போது அளித்துள்ளீர்கள். அடுத்த பாகம் எப்போது?

நிர்வாகம், நிதி உட்பட பத்து தலைப்புகள் உள்ளன. அதற்கான வேலையை தொடங்கிவிட்டோம். டிசம்பரில் அறிக்கையை ஒப்படைப்போம்.